பெருங்காளமேகம் பிளாய்

அதிமதுரகவி அஹங்காரத்துடன் காளமேகப்புலவரை நோக்கி, "நான் யார் தெரியுமா? மூச்சு விடும் நேரத்தில் முன்னூறு நானூறு பாடல்களையும், ஆச்சென்று தும்மல் போடும் நேரத்தில் ஐநூறு பாடல்களையும் புனைந்து கூறும் வல்லமை படைத்த அதிமதுரகாவி நான்" என்ற பொருள்பட,

மூச்கசுவிடு முன்னே முன்னூறு நானூறும்
ஆச்சென்றா லைந்நூறு மாகாவோ - பேச்சென்ன
வெள்ளைக் கவிகாள மேகமே உன்னுடைய
கள்ளக் கவிக் கடையைக் கட்டு

எனும் பாடலைக் கூறினார். வெள்ளைக் கவி என்றால் வெண்பா பாடும் புலவர் என்று பொருள்.

இதற்கு மறுமொழியாகக் காளமேகம், "இம்மென்று குரலெழுப்பும் நேரத்தில் எழுநூறு, எண்ணூறு பாடல்களையும், அம்மென்று வாயை மூடுவதற்குள் ஆயிரம் பாடல்களையும் புனைந்து கூறும் வல்லமை பெற்ற காளமேகம் நான். என் முன்னர் நீ ஒரு சிறு பிள்ளை" எனும் பொருள்பட

இம்மென்னு முன்னே எழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாவோ - சும்மா
யிருந்தா லிருப்பே னெழுந்தேனே யாகிற்
பெருங்காள மேகம் பிளாய்.

என முழங்கினார்.

Labels:

கவி மழை

ஒரு முறை காளமேகப் புலவர் திருமலைராயன் என்ற மன்னன் ஆண்டுவந்த திருமலைராயன் பட்டணம் என்ற நாட்டுக்குச்சென்றார். அரச சபைக்கு வந்த அவரை யாரும் வரவேற்கவில்லை. இருக்க ஆசனமும் தரவில்லை. இந்த அவமானத்தைப் போக்க காளமேகம் கலைவாணியை மனதில் தியானித்து

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்


எனும் வெண்பாவைப் பாடவும், அன்னை கலைவாணியின் அருளா அரசனது சிம்மாசனம் வளர்ந்து இடம் கொடுக்கவே, அவ்வாசனத்தில் அரசனுக்குச் சரிசமமாக அமர்ந்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாரானார்.

அரசன் அவரை யாரென்று விசாரிக்கவே, அவர் தான் "காளமேகம்" என்று பதிலுரைத்தார். அங்கு ஆஸ்தான கவியாக இருந்த அதிமதுரகவி என்பவர் அப்பொழுது காளமேகத்தைப் பார்த்து இகழ்க்சியுடன், "மேகமென்றால் பொழிய வேண்டுமே?" என்று கேட்க அதற்குக் காளமேகம் "பொழியத்தான் வந்தது"என்று பதிலிறுத்தார். அதற்கு "எப்படி?" என்று மீண்டும் அதிமதுரகவி வினவவே,

"உலகைச்சூழ்ந்துள்ள கடல் நீரில் உப்பு மிகுந்திருப்பதால், தொல்காப்பியர் எழுடதிய நன்னூல் சூத்திரரமெனும் இலக்கண நூலாகிய கடலில் மொண்டு, அகத்தியன் தமிழ்படைத்த பொதிகை மலைமேல் நின்று, வானளாவிய கவிதைகளை உரைக்கின்ற புலவர்களின் மனதில் இடியென இடித்தது, மின்னலென முழங்கி, கவிமழை பொழியக் காளமேகம் புறப்பட்டது" எனும் பொருள்படட,

கழியுந் திரைகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வான்கவிதை
மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே


எனும் பாடலைக் கூறினார்.

Labels:

காளியின் அருள் பெற்றார் காளமேகம்

பிறப்புற்றேன் காளியிடம் பேரன்புற்றேன்,
பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன், செல்வத்தின் வளமும் பெற்றேன்,
மன்னருடன் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புற்றேன்...


என்று மஹாகவி காளிதாசனுக்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கொப்ப, காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். பிறப்பால் வரதன் ஒரு வைணவனானாலும் மோஹனாங்கி எனும் சைவ சமயத்தைச் சேர்ந்த நடனமாது ஒருத்தியை அவன் மனதாரக் காதலித்தான். அவளும் அவன்மேல் தீராத மோஹம் கொண்டிருந்தாள்.

ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சியொன்றில் மோஹானங்கி

உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின் அன்பரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாதெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோரெம்பாவாய்


என்ற திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுகையில் அவளது தோழிமார்கள், இப்படிப்பட்ட சைவ சமயப் பாடலுக்கு ஆடும் அவள் ஒரு வைணவனைக் காதலிப்பது குறித்து கேலியாகப் பேசவே அவள் மனம் வேதனைப்பட்டாள். அன்று தன்னைக் காணத் தன் விட்டிற்கு வந்த வரதனுக்குக் கதவைத் திறக்காமலேயே இருந்துவிட்டாள். அவள் தான் வைணவனாக இருப்பது குறித்து இவ்வாறு பிணங்குகிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட வரதன் அக்கணமே சைவ சமயத்தில் சேர்ந்தான்.

அதன்பின் ஒரு நாள் இரவில் வரதன் ஒரு காளி கோவிலில் தங்கி உறங்கிக்கொண்டிருந்தான். அதே கோவிலில் நீண்ட காலமாகக் காளியின் அனுக்கிரஹம் வேண்டி வேறொரு அந்தணன் தவம் செய்துகொண்டிருந்தான். அவனும் அன்றிரவு கோவிலிலேயே உறங்கிக்கொண்டிருந்ததான். காளி தேவி அவன் தவத்துக்குப் பலனளிக்க ஒரு சிறுமியாக உருவெடுத்து, தன் வாயில் தாம்பூலம் தரித்துக்கொண்டு அவ்வந்தணனை எழுப்பி அவனது வாயில் தாம்பூலத்தைத் துப்ப எத்தனித்தாள்.

யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில் உமிழ்வது

என்று அவ்வந்ததணன் கோபம் கொண்டுரைக்கவே அவள் அருகில் படுத்திருந்த வரதனை எழுப்பி அவன் வாயில் தாம்பூலத்தை உமிழ முயற்சிக்கையில், அவன் அவள் மோஹனாங்கி என்று எண்ணி, எங்கே தான் வாய் திறவாவிடில் மறுபடியும் கோபித்துக்கொள்வாளோ என்றெண்ணி வாயைத் திறந்தான். அன்னையின் எச்சில் தாம்பூலத்தை உண்ட வரதன் கவிபாடும் புலமை பெற்றான். வாயைத் திறந்து சொல்லும் சொற்களனைத்தும் கவிமழையாய்ப் பொழிந்ததால் வரதனை அனைவரும் காளமேகம் என்று மரியாதையுடன் அழைக்கலாயினர்.

தொடரும்...

Labels: