காளியின் அருள் பெற்றார் காளமேகம்

பிறப்புற்றேன் காளியிடம் பேரன்புற்றேன்,
பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்
வரப்பெற்றேன், செல்வத்தின் வளமும் பெற்றேன்,
மன்னருடன் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புற்றேன்...


என்று மஹாகவி காளிதாசனுக்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளுக்கொப்ப, காளிதேவியின் அருளால் கவிபாடும் திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். பிறப்பால் வரதன் ஒரு வைணவனானாலும் மோஹனாங்கி எனும் சைவ சமயத்தைச் சேர்ந்த நடனமாது ஒருத்தியை அவன் மனதாரக் காதலித்தான். அவளும் அவன்மேல் தீராத மோஹம் கொண்டிருந்தாள்.

ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சியொன்றில் மோஹானங்கி

உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின் அன்பரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாதெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோரெம்பாவாய்


என்ற திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுகையில் அவளது தோழிமார்கள், இப்படிப்பட்ட சைவ சமயப் பாடலுக்கு ஆடும் அவள் ஒரு வைணவனைக் காதலிப்பது குறித்து கேலியாகப் பேசவே அவள் மனம் வேதனைப்பட்டாள். அன்று தன்னைக் காணத் தன் விட்டிற்கு வந்த வரதனுக்குக் கதவைத் திறக்காமலேயே இருந்துவிட்டாள். அவள் தான் வைணவனாக இருப்பது குறித்து இவ்வாறு பிணங்குகிறாள் என்பதைத் தெரிந்துகொண்ட வரதன் அக்கணமே சைவ சமயத்தில் சேர்ந்தான்.

அதன்பின் ஒரு நாள் இரவில் வரதன் ஒரு காளி கோவிலில் தங்கி உறங்கிக்கொண்டிருந்தான். அதே கோவிலில் நீண்ட காலமாகக் காளியின் அனுக்கிரஹம் வேண்டி வேறொரு அந்தணன் தவம் செய்துகொண்டிருந்தான். அவனும் அன்றிரவு கோவிலிலேயே உறங்கிக்கொண்டிருந்ததான். காளி தேவி அவன் தவத்துக்குப் பலனளிக்க ஒரு சிறுமியாக உருவெடுத்து, தன் வாயில் தாம்பூலம் தரித்துக்கொண்டு அவ்வந்தணனை எழுப்பி அவனது வாயில் தாம்பூலத்தைத் துப்ப எத்தனித்தாள்.

யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில் உமிழ்வது

என்று அவ்வந்ததணன் கோபம் கொண்டுரைக்கவே அவள் அருகில் படுத்திருந்த வரதனை எழுப்பி அவன் வாயில் தாம்பூலத்தை உமிழ முயற்சிக்கையில், அவன் அவள் மோஹனாங்கி என்று எண்ணி, எங்கே தான் வாய் திறவாவிடில் மறுபடியும் கோபித்துக்கொள்வாளோ என்றெண்ணி வாயைத் திறந்தான். அன்னையின் எச்சில் தாம்பூலத்தை உண்ட வரதன் கவிபாடும் புலமை பெற்றான். வாயைத் திறந்து சொல்லும் சொற்களனைத்தும் கவிமழையாய்ப் பொழிந்ததால் வரதனை அனைவரும் காளமேகம் என்று மரியாதையுடன் அழைக்கலாயினர்.

தொடரும்...

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home